உயிர்கல் - நீ உயர இதைக்கல் ! (கட்டுரை தொடர் - 1)
கல்லுக்கு உயிர் இல்லை, உயிருள்ளது கல் இல்லை! கல்லை வைத்து பல வேலைகள் செய்யலாம். ஒருவரை காயப்படுத்தலாம், வீடு கட்டலாம், பாதுகாப்பு அரன் அமைக்கலாம், இன்னும் பற்பல விஷயங்களுக்கு அது பயன்படும். பரிசுத்த பைபிளில் மனிதனுக்கு பற்பல உருவக சொற்களும் உவமைகளும் சொல்லப்பட்டாலும், அதிகம் பேர் கவனியாமற்போன ஒரு உருவகம் கல் என்பது. அதைப்பற்றி இக்கட்டுரையில் சற்று சிந்திக்கலாம்.
இயேசு இவ்வுலகில் வாழ்ந்தபோது, அவர் திருமுழுக்கு பெற்ற பின், தன் சேவையின் ஆரம்ப நாட்களில் தன்னைப் பின்பற்றி வந்த அந்திரேயா என்பவரால் இயேசுவுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட சீமோன் எனும் ஒரு மனிதனை கண்ட மாத்திரத்தில், அவனை பார்த்து சொன்னார்: "சீமோனே, இனி நீ கேபா என்று அழைக்கப்படுவாய்" என்றார். "கேபா" என்பது ஒரு எபிரெய மற்றும் அராமிய சொல், அதன் அர்த்தம் "கல்" என்பது. இயேசுவின் ஒவ்வொரு சொல்லும் செயலும், அவரை குறித்து பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பாக எழுதப்பட்ட இறைவாக்கியங்கள் அனைத்தும் நிறைவேரும்படி இருந்தது. அதாவது, பரிசுத்த பைபிளில் பழைய ஏற்பாடு என்று அழைக்கப்பட கூடிய ஆதியாகமம் முதல் மல்கியா வரை சொல்லப்பட்ட அனைத்தும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ, "மேசியா" அல்லது மனிதனின் வீழ்ச்சியிலிருந்து மனிதகுலத்தை காப்பற்ற "அபிஷேகம்பண்ணப்பட்ட" அல்லது "ஏற்ப்படுத்தப்பட்ட" ஒருவரை குறிக்கிறது. அவரே இயேசுவானவர்.
சீமோன் எனும் ஒருவரை பேதுரு அல்லது கேபா அல்லது கல் என்று இயேசு அழைத்தது, நான் ஏற்கனவே மேலே குறிப்பிட்ட நேரடி அல்லது மறைமுக இறைவாக்கியங்களின் நிறைவேறுதலே.
கற்கள் பழைய ஏற்பாட்டில் பற்பல விஷயங்களை நமக்கு காட்டுகிறது. தூரமான ஒரு இடத்திற்கு யாக்கோபு எனும் மனிதன் தன்னந்தனியாளாய் செல்கிறான், ஒரு இரவில் ஒரு கல்லை தன் தலைக்கு வைத்து படுத்து உறங்குகிறான், அன்று இரவு இறைவன் அவனுக்கு தரிசனமாகிறார், அவன் காலையிலெழுந்து, தலைக்கு வைத்து படுத்த சாதாரன கல்லை எடுத்து அதை நாட்டி வைத்து, அதின்மேல் என்னெய் வார்த்து அதை அபிஷேகம் செய்து (அடையாளமாக) அந்த இடத்துக்கு "இறைவனின் வீடு" என்று பெயெர் சூட்டினான்.
இச்செயலை செய்யும் முன் இராத்திரியில் அவன் தூங்கும் போது இறைவன் அவனுக்கு சொப்பனத்தில் ஒரு தரிசனத்தை காண்பித்தார். அதில் ஒரு ஏனி வானத்திலிருந்து பூமிவரை வைக்கப்பட்டு இருந்தது, அதில் இறைவனின் தூதுவர்கள் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாக இருந்தார்கள், அப்பொழுது இறைவன் யாக்கோபை ஆசீர்வதித்து அவனுக்கு பல வாக்குத்தத்தங்களை பண்ணினார். மறுநாளில் தான் யாக்கோபு தான் உறங்கிக்கொண்டிருந்த அந்த கல்லை எடுத்து அதை ஒரு தூனாக நிறுத்தி அதைன் மேல் என்னெய் வார்த்து அதை அபிஷேகம் செய்து, இறைவனின் வீடு என்று அந்த கல்லுக்கு பெயர் இட்டான். இவ்விடத்தில் ஒரு கல்லுக்கு இறைவனின் வீடு என்று பெயரிடப்பட்டதை நாம் கவணிக்க வேண்டும். (ஆதி 28:10-22)
இறைவனின் வீடு என்றால், இறைவன் தங்கும் இடம் என்று பொருள். மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையே வானத்துக்கும் பூமிக்கும் உள்ள அளவுக்கு இடைவெளி வந்ததற்கு காரணம் என்ன? இதை சற்று ஆராய் வேண்டியது அவசியம். மனிதனை கடவுள் படைத்தப்பொழுது அவனை தனது அடையாளமாக அல்லது சாயலாக (image) படைத்தார், மூல பாஷையில் இவ்விடத்தில் "ட்செலெம்" (tselem) என்ற ஒரு வார்த்தை இருக்கிறது அதன் நேரடி அர்த்தம் "சிலை" (Image) என்பதாகும். ஒரு சிலை எப்படி வேறு ஒரு உண்மைக்கு அடையாளமாக இருக்கிறதோ, அதேபோல, தான் படைத்த படைப்பிற்கு தன் அடையாளமாக இருக்கும்படி மனிதனை படைத்தார், மனிதனை தன் கரத்தின் கிரியைகளுக்கெல்லாம் அதிபதியாக அரசனாக வைத்தார். (சங்கீதம் 8). ஆனால் மனிதனோ, தனக்கு தானே நன்மை மற்றும் தீமையை நிர்னயித்துக்கொள்ளும் அதிகாரத்தை பெற எண்ணி, தீமையின் சூழ்ச்சியினால் வஞ்சிக்கப்பட்டு, இறைவன் வேண்டாம் என விலக்கின விஷயத்தை கையிலெடுத்தான். அதனால், பாவம் அல்லது தீமை அல்லது பாழ் மனித குலத்தில் வந்தது. மனிதனுக்குள் வந்த இத்தீமை அவனை கடவுளை விட்டு மிக தூரமாக்கினது, நாளடைவில் இந்த விரிசல் நீண்டுகொண்டே சென்றது. மனிதனும் கடவுளிடம் நெருங்க பற்பல உபாய தந்திரங்களை தேடி நாடினான், உயரமான கோபுரத்தை கட்ட முயற்சித்தான், மதங்கள் பல உருவாக்கினான் ஆனால் மனிதனின் தீமையே மனிதனை கடவுளிடம் இருந்து பிரித்தத்து. இதைக்குறித்து ஏசாயா எனும் இறைவாக்கினரை கொண்டு இறைவன் சொன்னார்: "உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப்பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது." என்று சொன்னார்.
இந்த காரனத்தினாலேயே, வானத்துக்கும் பூமிக்குமான தூரமளவு விரிசலும், பிரிவும், இடைவெளியும் ஏற்பட்டதை நாம் கவனிக்க வேண்டும்.
இந்த பிளவை சீர் செய்ய கடவுள் எடுத்த முயற்சியே ஒரு ஏனி. அந்த ஏனியாக, வழியாக ஒருவர் வரப்போகிறார் என்பதே இறைவாக்கு. மனிதனுக்குள் இறைவன் வாழ்ந்து மனிதனை இப்பூமியில் ஒரு தோட்டத்தில் வைத்து மனிதனோடு உறவாடும்படி இறைவன் ஒரு வீட்டை, கோயிலை, படைப்பை கட்டினார், ஆனால் மனிதன் தீமையினால் அதனை இடித்தே விட்டான். இப்பொழுது இந்த பூமியில் இறைவன் வாசம் செய்தால் மட்டுமே மனிதன் இறைவனை அறிந்துகொள்ள முடியும் எனவே, உருவமற்ற வார்த்தையான இறைவன் மாம்சமாகி மனிதர் நடுவில் வாசம் செய்யும்படி "அபிஷேகம்" செய்யப்பட்டார், அதாவது ஏற்ப்படுத்தப்பட்டார், அவர்தான் "மேசியா"என்று அழைக்கப்பட்ட "கிறிஸ்து" எனும் இயேசு. (யோவான் 1:1, 1:14). யாக்கோபு அந்த கல்லை அபிஷேகம்பன்னி, அந்த கல் இறைவனுடைய வீடாகும் என்று சொன்னான். (ஆதி 28:22) இயேசுவே அந்த கல், இந்த கல் இயேசுவுக்கு ஓர் அடையாளம், இவரிலிருந்து இறைவனின் தூதுவர்கள் இறைவனிடத்திற்கு ஏறுகிறவர்களாகவும், இறங்குகிறவர்களாயும் இருப்பார்கள் என்று இயேசுவே சொல்லியிருக்கிறார். (யோவான் 1:51) மனிதன் இறைவனை அறிந்துகொள்ள இயேசுவை அறிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், அவரே பார்க்கமுடியாத இறைவனின் பரிபூரண சாயல் (image). அவரை அறிந்து கொண்டாலே பார்க்கமுடியாத இறைவனை அறிந்துகொள்ள முடியும், அவரிலிருந்தே, இறைவனிடத்திற்கு மனிதன் செல்ல முடியும், அவரை தவிர வேறு வழி இல்லை. இயேசு சொன்னார்: "நானே வழியும், உண்மையும், வாழ்வுமாயிருக்கிறேன், என்னாலெயல்லாமல் ஒருவனும் இறைவனிடத்திற்கு வர முடியாது." (யோவான் 14:6). மனிதனுக்காக தீமையை சகித்து, மனிதனுக்காக மரித்து, மனித தீமையிலிருந்து மனிதனை காப்பாற்றி மரித்து அடக்கம்பண்ணப்பட்டு உயிரோடெழுந்த இயேசுவே இறைவனின் வீடாகவும், ஆலயமாகவும், கோயிலாகவும் இருக்கிறார்.(யோவான் 2: 19-22).
இயேசுவே அந்த கல் என்றால், பின் ஏன் அவர் சீமோன் எனும் ஒரு மனிதனை கல் என அழைத்தார்? (தொடரும்..)

Comments
Post a Comment