கடவுள் இருக்கிறாரா? யாத்திராகமம் குறித்த சிந்தனைகள்

 

கடவுள் இருக்கிறாரா? யாத்திராகமம் குறித்த சிந்தனைகள்



என் வாழ்வின் சில தருணங்களில், கடவுளின் இருப்பை எவ்வித சந்தேகமுமின்றி என்னால் காண முடிகிறது. வேதாகம வசனங்கள் ஆழமான அர்த்தத்தோடு ஒளிர்கின்றன, ஜெபம் இயல்பாக வருகிறது. கடவுள் எனது சூழ்நிலைகளை எவ்வளவு லாவகமாகக் கையாளுகிறார் என்பதை எண்ணிப்பார்க்கும்போது ஆராதனை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. இக்காலங்களில் கடவுளோடு நடப்பது, அவர் உருவமாய் என்னருகில் இருப்பது போன்ற ஒரு உணர்வை அளிக்கிறது; என் அன்பு கீழ்ப்படிதலாய் பொங்கி வழிகிறது.

ஆனால், இன்னும் சில காலங்களில் கடவுள் விடுமுறையில் சென்றுவிட்டது போலத் தோன்றும். அதே வேதாகம வசனங்கள் உயிர் இல்லாதது போல் இருக்கும்; ஜெபத்தில் போராட வேண்டியிருக்கும், ஆராதனைக்கு என்னை நானே கட்டாயப்படுத்த வேண்டியிருக்கும். கடவுள் ஏன் சில நேரங்களில் இவ்வளவு தூரத்தில் இருப்பது போல் தோன்றுகிறார்?

இஸ்ரவேலர்களின் வாழ்க்கையைப் பார்க்கும்போது, நம் வாழ்வில் நாம் உணரும் அதே கடவுளின் இருப்பின் ஏற்றத்தாழ்வுகளை அங்கும் காண்கிறோம். யாத்திராகமத்தின் முதல் அதிகாரம், ஆபிரகாமுக்குக் கடவுள் கொடுத்த வாக்குத்தத்தத்தின்படி (அவரது சந்ததி பெருகும் என்பது) இஸ்ரவேலர் ஒரு தேசமாக வளர்ந்ததைச் சித்தரிக்கிறது. அவர்கள் எவ்வளவு பெரிய தேசமாக வளர்ந்தார்கள் என்றால், பார்வோன் பயத்தினாலும் வஞ்சகத்தினாலும் அவர்களை அடிமைப்படுத்தும் அளவுக்கு அவர்கள் பெருகியிருந்தார்கள் (1:8–14).

கடவுள் தங்களுக்கு வாக்களித்த தேசத்திலிருந்தும் அவருடைய தயவிலிருந்தும் விலகி இருந்த இஸ்ரவேலர்கள், தங்கள் கடவுளைப் புரிந்துகொள்ளப் போராடியிருக்க வேண்டும். ஏன் கடவுள் தங்கள் எண்ணிக்கையைப் பெருக்கிவிட்டு, பார்வோன் தங்கள் ஆண் குழந்தைகளை நைல் நதியில் மூழ்கடிக்க அனுமதித்தார் (1:22)? கடவுள் எப்போது தங்களை விடுவிப்பார்?

தலைமுறைகள் கடந்தன. பின்பு கடவுள் மோசேயைக் காப்பாற்றி, பார்வோனின் அரண்மனையிலேயே வளரச் செய்தார். மோசே எகிப்தை விட்டு ஓடி மீதியான் சமவெளியில் அலைந்து திரிந்தபோது, எரியும் முட்செடியின் வழியாகக் கடவுள் தன்னை வெளிப்படுத்தினார். அவர் இஸ்ரவேலர்களுக்காகச் செயல்பட்டார்; அற்புதங்கள், எகிப்தின் மீதான வாதைகள் மற்றும் சிவந்த சமுத்திரத்தைப் பிளந்தது ஆகியவற்றின் மூலம் தனது இருப்பைப் வெளிப்படுத்தினார்.

பகலில் மேகத்தூணாகவும், இரவில் அக்கினித்தூணாகவும் கடவுள் இஸ்ரவேலரை வனாந்தரத்தில் வழிநடத்தினார். மலையிலிருந்து அவரது குரல் இடிமுழக்கமாய் ஒலித்தது, அவருடைய பரிசுத்தத்தைக் கண்டு இஸ்ரவேலர்கள் தங்கள் உயிருக்கே பயந்தார்கள். தன் மக்களிடையே வாசம்பண்ண விரும்பிய கடவுள், ஒரு 'வாசஸ்தலத்தை' (Tabernacle) அமைக்கும்படி கட்டளையிட்டார். பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு எருசலேம் தேவாலயம் கட்டப்படும் வரை, இதுவே அவர் தங்கும் இடமாக இருந்தது. இஸ்ரவேலர்களிடையே அவரது இருப்பு பிரமிக்கத்தக்கதாக இருந்தது.

இருப்பினும், அவருடைய மகிமையின் பல நினைவுகள் இருந்தும், இஸ்ரவேலர்கள் கடவுளின் நெருக்கத்தையும் அவர்கள் மீதான அக்கறையையும் மறந்துபோனார்கள். சிவந்த சமுத்திரத்திற்கு முன்பாக எகிப்தியர்கள் அவர்களைத் துரத்தி வந்தபோது, வனாந்தரத்தில் சாவதற்காகவா மோசே எங்களை எகிப்திலிருந்து அழைத்து வந்தாய் என்று முறையிட்டார்கள் (14:11–12). மூன்று நாள் பயணத்திற்குப் பிறகு, தண்ணீர் கிடைக்காமலும், உணவு தீர்ந்து போனதாலும் அவர்கள் சோர்ந்து போனார்கள் (15:22; 16:3). மோசே சீனாய் மலையின் உச்சியில் 40 பகலும் இரவும் யெகோவாவிடமிருந்து கட்டளைகளைப் பெற்றுக்கொண்டிருந்தபோது, இஸ்ரவேலர்கள் ஒரு பொற்கன்றுக்குட்டியை உருவாக்கி அதை வணங்கினார்கள்; எகிப்திலிருந்து தங்களை விடுவித்த பெருமையை அந்தப் பொய் தெய்வத்திற்கு வழங்கினார்கள் (32:1–6).

சிறு கஷ்டம் அல்லது குழப்பம் வந்தவுடனேயே, கடவுள் தங்களைக் கைவிட்டுவிட்டார் என்று இஸ்ரவேலர்கள் எண்ணினார்கள். யாத்திராகமம் புத்தகம் முழுவதும் இஸ்ரவேலர்கள் கடவுளின் இருப்பை சந்தேகப்பட்டாலும், நமக்கோ (முழு கதையையும் அறிந்திருப்பதால்) அவர் அவர்களைப் பாதுகாத்ததும் பராமரித்ததும் தெளிவாகத் தெரிகிறது: கடவுள் எல்லா நேரங்களிலும் இஸ்ரவேலருக்கு அருகிலேயே இருந்தார். இஸ்ரவேலர்களின் பார்வையில் சான்றுகள் குறைவாகத் தெரிந்தாலும், அவருடைய இருப்பும் பராமரிப்பும் மாறாமல் இருந்தது. அவர்களின் குழந்தைகள் ஆபத்தில் இருந்தபோது கூட, எபிரேய மருத்துவச்சிகளின் கீழ்ப்படிதலைக் கடவுள் கனப்படுத்தியதாக யாத்திராகம ஆசிரியர் கூறுகிறார் (1:20). அடிமைத்தனத்தில் மக்களின் பெருமூச்சை அவர் கேட்டார், தனது உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார், அவர்களின் கடினமான ஆண்டுகளில் அவர்களைக் கண்ணோக்கினார் (2:23–25).

நமது நிலை என்ன? கடவுள் தூரத்தில் இருப்பது போல் தோன்றும் போது நாம் எந்த உண்மைகளைப் பற்றிக்கொள்கிறோம்? இயேசுவின் வருகையால்தான் மனிதகுலத்திடையே கடவுளின் இருப்பு முழுமையாக வெளிப்பட்டது என்பதை நாம் அறிவோம். யோவான் நற்செய்தி கூறுகிறது, "அந்த வார்த்தை மாம்சமாகி, நம்மிடையே வாசம் பண்ணினார்" (யோவான் 1:14). கிரேக்கத்தில் "வாசம் பண்ணினார்" என்பதற்கு நேரடிப் பொருள் "கூடாரம் அமைத்தார்" என்பதாகும். இயேசுவில், கடவுள் நம்மிடம் நெருங்கி வந்தார்—வாசஸ்தலத்தில் ஒரு கூடாரத்தில் இருந்தது போலல்லாமல், இப்போது மனிதச் சதையோடு வந்தார்.

இன்று, மேகத்தூணிலும் அக்கினித்தூணிலும் கடவுளைத் தேடுவதற்குப் பதிலாக, கடவுளின் இருப்பைச் சுமந்து செல்லும் கிறிஸ்தவர்களுக்குள் பரிசுத்த ஆவியானவர் வாசம்பண்ணுகிறார். அவர் பெரும்பாலும் உணரப்படாமல் போனாலும், நிலைமை எப்போதும் இப்படியே இருக்காது. புதிய வானம் மற்றும் புதிய பூமி பற்றிய யோவானின் தரிசனத்தில், எல்லாம் புதிதாக்கப்பட்டதை அவர் விவரிக்கிறார். அப்போது சிங்காசனத்திலிருந்து ஒரு பலத்த சத்தம் முழங்கியது: "அவர் அவர்களுடனே வாசமாயிருப்பார், அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன் தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார்" (வெளி 21:3).


ஆசிரியர்: ஆப்ரி ஸ்மித் (Aubry Smith) முதலில் 'Bible Study Magazine' (நவம்பர்–டிசம்பர் ‘14) இதழில் வெளியிடப்பட்டது.

Comments

Popular posts from this blog

When Ideologies Fail the Church: A Call to Holy Separation

Reclaiming Education as a Sacred Mission of the Church

Rethinking Humanity: What Jesus Reveals About the Dignity of Women