இந்திய குடியரசும், இயேசு ராஜாவின் இறையரசும்

இந்தியக் குடியரசும், இயேசு இராஜாவின் இறையரசும் 
 - Dr. Joshua Thangaraj Gnanasekar
( Physiotherapist, Bible teacher, Author,Gospel preacher ) 


ஆகஸ்ட் 15, 1947ல் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையடைந்த நம் இந்திய தேசம் 1950 ஜனவரி 26ல், இந்திய ஜனநாயகக் குடியரசு என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது!

அன்றிலிருந்து இன்றுவரை இந்திய அரசு பல்வேறு இயக்கங்களாலும் கோட்பாடுகளாலும் சித்தாந்தங்களினாலும் இயக்கப்பட்ட தலைவர்களால் ஆட்சிசெய்யப்பட்டாலும், குடிமக்களால், குடிமக்களுக்கான அரசாகவே எப்போதும் 100% செயல்பட்டதில்லை. நம்முடைய அரசு மட்டும் அல்ல, அதிகாரம் உலகில் யார் கையில் வந்தாலும், அபகரிக்கும் குணமுடையவனாகவே மனிதன் எக்காலத்திலும் செயல்படுகிறான். முடியரசோ, குடியரசோ இந்த விஷயத்தில் விதிவிலக்கில்லை. இந்த உலகத்தில் உண்டான அரசுகள் அனைத்துமே  மற்றவர்களின் இரத்தத்தைச் சிந்தி உண்டாக்கப்பட்டவைதான். இந்த அரசில் தாழ்மை, சாந்தம், நன்மை செய்து துயரம் சகிப்போர், நீதிக்காக தாகமாகவும் பசியாகவும் இருப்போர், பொறுமையுள்ளோர் போன்றவர்கள் மகிழ்வோடும் நிம்மதியோடும் வாழமுடியாது. ஏமாற்றமும், துரோகமுமே மிஞ்சும். 

அகிலத்தையும் உருவாக்கிய இறைவன் மனிதனை இந்த பூமியை ஆளவும், அதைப் பண்படுத்திப் பாதுகாக்கவும் வைத்தார். ஆனால் மனிதனோ, பேராசையினாலும் கீழ்ப்படியாமையினாலும் தானே தனக்குக் கடவுள் ஆக நினைத்து, இறை வார்த்தையை மீறினதினால், தீமையின் அடிமையாக மாறி இந்த உலகத்தை இப்பொழுது இருக்கும் அவல நிலைக்குக் கொண்டுவந்துவிட்டான்! இன்று மனிதன் தீமைக்கு அடிமையாகி அதன்மூலம் சாவிற்கும் அடிமையாகிவிட்டான். எனவேதான் தீமையின் விளைவுகளோடு போராடி அதை வெல்லமுடியாமல் திகைத்து தொடர்ந்து தீமையைச் செய்தும்வருகிறான். பொல்லாத ஆசைகளைக் கொண்டவனாகவும், காமவெறி கொள்பவனாகவும், கடவுள் அல்லாதவற்றை கடவுள் என்று வணங்குபவனாகவும் இருக்கிறான். உள்ளே ஒன்றும் வெளியே ஒன்றுமாக வாழ்வதுடன், பொய் சொல்கிறவனாகவும், கீழ்ப்படியாதவனாகவும், இயற்கையான அன்பற்றவனாகவும் மிருகமாகவும் மாறிவிட்டான். 

ஆனால், இறைவனோ இப்படிப்பட்ட மனிதனை அதாவது உம்மை நேசிக்கிறார், எனவே, மனிதனுக்காகத் தீமைகள் அனைத்தையும் தன்மீது ஏற்றுக்கொண்டு, (மற்றவரின் இரத்தத்தை சிந்தாமல்) தன் இரத்தத்தைச் சிந்தி இறைகோபத்தைச் சகித்து, தமது இறையரசை ஏற்படுத்தினார். இந்த அரசில் அன்பும், நீதியும், இறைவனின் ஆவியினால் வரும் மகிழ்வும் உண்டு. இந்த அரசில் உயிருள்ள நம்பிக்கை உண்டு. காரணம், ராஜாதி ராஜாவாகிய இதன் ராஜா இயேசு, மரணத்தை ஜெயித்து எழுந்து இதில் இருக்கும் மீட்க்கப்பட்ட மனுக்குலத்திற்கு அழியாத வாழ்வை இலவசமாகத் தருகிறார். பாவங்களை மன்னிக்கிறார். இந்த அரசில் தாழ்மை, சாந்தம், நன்மை செய்து துயரம் சகிப்போர், நீதிக்காக தாகமாகவும் பசியாகவும் இருப்போர், பொறுமையுள்ளோர் போன்றோர் மகிழ்ச்சியோடும் நிம்மதியோடும் வாழ முடியும். 

இந்த பூமியில் இவர்களுக்குத் துன்பமும் பாடுகளுமே கிடைத்தாலும் அவை சிறிதுகாலத்திற்குத்தானே? இவற்றைப் பொறுமையோடு சகித்து, என்றென்றும் அழியாத அரசில் பங்குள்ளவர்களாக இருக்கவே இறைவன் உங்களை அழைக்கிறார். இந்த இறையரசை நம்புங்கள். இதன் ராஜாவாம் இயேசு இரட்சகரை நம்புங்கள். உங்கள் தீமைகளுக்காக பலியாகி மரனத்தை வென்ற இயேசுவை ஏற்றுக்கொண்டு உங்கள் தீய வழிகளைவிட்டு மனம் திரும்பி, இந்த இறையரசில் உங்கள் வருகையை உறுதிசெய்துகொள்ளுங்கள். இந்த பூமியில் உள்ள கொஞ்ச நாள் வாழ்க்கையில் இயேசுவை மட்டும் பின்பற்றி அவர் தரும் புதிய வாழ்வில் நிலைத்திருக்கத் தீர்மானியுங்கள். இயேசுவின் இறையரசு நித்தியமானது, நிரந்தரமானது. அவர் உங்களை அன்போடு அழைக்கிறார். 
மேலும் தகவலறிய எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்.

Comments

Popular posts from this blog

When Ideologies Fail the Church: A Call to Holy Separation

Reclaiming Education as a Sacred Mission of the Church

Rethinking Humanity: What Jesus Reveals About the Dignity of Women